வெளிநாடுகளில் இருந்து கச்சா சர்க்கரையை சுங்க வரியின்றி இறக்குமதி செய்ய காலக்கெடு டிசம்பர் 31 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு சர்க்கரைத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், விலையேற்றத்தையும் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த ஆகஸ்டில் 10 லட்சம் டன் கச்சா சர்க்கரையை வரியில்லா சலுகையுடன் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில், மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: வரியில்லா சலுகையை பயன்படுத்தி சர்க்கரையை இறக்குமதி செய்ய காலக்கெடு, அக்டோபர் 31 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போதைய அறிவிப்பின்படி, இறக்குமதியாளர்கள் 10 லட்சம் டன் என்ற நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள், கச்சா சர்க்கரையை டிசம்பர் 31 வரை சுங்க வரியின்றி இறக்குமதி செய்யலாம்.
இறக்குமதிக்கான அளவு உயர்த்தப்படவில்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நிபந்தனைகளிலும் மாற்றம் செய்யப்படவில்லை. சர்க்கரை இறக்குமதியை மேற்கொள்ள இறக்குமதியாளர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கும் வகையில் இந்த கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.